×

நாளை நடைபெறும் கேட் தேர்வை ஒத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஐஐடி, எம்ஐடி போன்ற உயர் கல்வி மையங்களில் முதுநிலை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ‘கேட்’ எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு கேட் தேர்வு வரும் நாளை நடக்க உள்ளது. நாடு முழுவதும் 200 மையங்களில் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதை எழுதுகின்றனர். இந்நிலையில், இந்த தேர்வை ஒத்திவைக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், ‘லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் கேட் தேர்வில், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை. தேர்வை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் இப்போது இல்லை. அதனால், தேர்வை தள்ளி வைக்க வேண்டும்,’ என கோரப்பட்டது. நீதிபதி சந்திரசூட் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல்லவ் மோங்கியா, ‘கொரோனா பாதிப்பு, தேர்வு எழுதுபவர்களின் நிலையை புரிந்து கேட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும். தொற்று குறைந்ததும் புதிய தேதியில் தேர்வை நடத்தலாம்,’ என தெரிவித்தார்.
இதை நிராகரித்த நீதிபதிகள், ‘கேட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டது. இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்வை ஒத்திவைத்தால், ேதர்வுக்காக தயாராக இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது,’ என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : Supreme Court ,Kate , Supreme Court refuses to postpone CAT exam
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...